உணவகங்களில் தமிழ் வளர்ப்போம்

அரிசி, சோறு, உணவு எனப் பல்வேறு சொற்கள் தமிழில் இருந்தாலும், இன்று ‘ரைஸ்’ என்னும் ஆங்கிலச் சொல்தான் தமிழக உணவகங்களில் ஓங்கி ஒலிக்கக் கேட்கிறோம். இன்றைக்குக் குறைந்தது 3200 ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தில் சிறப்புற்றிருந்ததாகக் கருதப்படுகிறது பொருநை ஆற்றங்கரை நாகரிகம். அகழ்வாய்வுகளில் தற்போதுவரைக் கிடைக்கப்பெற்றுள்ள பொருநை நாகரிகத்தின் எச்சங்களின் மூலம் அரிசி, 3200 ஆண்டுகளாகத் தமிழ்ப் பண்பாட்டின் அடையாளங்களில் ஒன்றாகத் திகழ்வது உறுதியாகிறது.

பொருநை ஆற்றங்கரை நாகரிகம் குறித்து மேலும் அறிய, தமிழ்நாடு அரசின் தொல்லியல்துறை வெளியிட்டுள்ள நூலின் மின்வடிவத்தை இங்கே காணலாம். அரிசிக்கு இத்தகைய தொன்மை இருந்தும், இன்றைக்கு வாடிக்கையாளரும், பரிமாறுவோரும் மெத்தப் பாகுபாடின்றி, உணவகங்களில் ‘ரைஸ்’ என்றழைப்பது தகுமா?

‘ஆடுற்ற ஊன் சோறு’ என்று கிட்டத்தட்ட 2500 ஆண்டுகளுக்கு முன்னர் மாண்புறத் தழைத்திருந்த சங்ககாலச் சமூகம் முதலே அறியப்பட்டிருந்தாலும், இன்று ‘மட்டன் பிரியாணி’ என்பதுதான் பரவலாகப் பயன்பாட்டில் உள்ளது. சங்ககால இலக்கியமான மதுரைக் காஞ்சி,

‘…தொடித் தோட்கை துடுப்பு ஆக,

ஆடுற்ற ஊன் சோறு

நெறி அறிந்த கடி வாலுவன்… ‘ (வரிகள் 34-36)

என்று அழகுறப் பதிவு செய்துள்ளது.

மேலும், ‘ஊன்துவை அடிசல்’ , ‘ஊன்துவை கறிசோறு’ , ‘கொழுந்துவை ஊன்சோறு’ என்று பலவிதங்களில் சங்க இலக்கிய நூல்களான பதிற்றுப்பத்து, புறநானூறு (14 ஆம் பாடல்), புறநானூறு (113 ஆம் பாடல்) பதிவு செய்துள்ளமை 2500 ஆண்டுகள் முன்பே ஊன்சோறு, மக்களின் உணவுப் பழக்கத்தில் ஆழமாக ஊடுருவி இருந்ததைத் தெளிவுறக் காட்டுகிறதல்லவா? அப்படி இருக்கும்போது, ‘மட்டன் பிரியாணி’ , ‘மட்டன் ஃப்ரை’ , ‘மட்டன் சுக்கா’ , ‘மட்டன் மசாலா’ , ‘மட்டன் பெப்பர் ஃப்ரை’ , ‘சிக்கன் பிரியாணி’ , ‘சிக்கன் ஃப்ரை’ , ‘சிக்கன் 65’ , ‘சிக்கன் மசாலா’ , ‘பெப்பர் சிக்கன் ஃப்ரை’, என்று பரவலாக ஆங்கிலச் சொற்கள் தமிழ் உணவகங்களில் ஆதிக்கம் செலுத்துவது தமிழ்மொழி வளர்ச்சிக்கு எந்த வகையில் உதவும்?

ஆங்கில மொழியாதிக்கம் அசைவம் மட்டுமல்லாமல் பாகுபாடின்றி சைவ உணவிலும் விரவிக் கிடக்கிறது. ‘ஆனியன் ஊத்தப்பம்’, ‘டோமேட்டோ ஊத்தப்பம்’, ‘மேங்கோ ஜுஸ்’, ‘கிரேப் ஜூஸ்’, ‘பொமகிரானட் ஜூஸ்’, ‘கோகனட் ரைஸ்’, ‘கர்ட் ரைஸ்’, ‘லெமென் ரைஸ்’, என்று ஆங்கிலமே நம் உணவகங்களில் கோலோச்சுகிற வருந்தத்தக்கச் சூழலே இன்றுள்ளது. குடிக்கும் நீரைக்கூட கேட்பவரும், பரிமாறுபவரும் ‘வாட்டர்’ என்று அடையாளப்படுத்துவது தமிழுக்கு ஏற்பட்டுள்ள இழிநிலையல்லவா?

இப்படி நமது உணவு வகைகள் ஆங்கிலமயமாகிப் போவதால், நல்ல தமிழ்ச் சொற்களான ஆடு, கோழி, ஆடுற்ற ஊன்சோறு, ஆடு வறுவல், ஆடு தொக்கு, மிளகிட்ட ஆடு வறுவல்/தொக்கு, கோழி ஊன்சோறு, கோழி வறுவல், கோழி 65, கோழி தொக்கு, மிளகிட்ட கோழி வறுவல்/தொக்கு, வெங்காய ஊத்தப்பம், தக்காளி ஊத்தப்பம், மாம்பழச்சாறு, மாதுளம்பழச்சாறு, தேங்காய் சாதம், தயிர் சாதம், எலுமிச்சை சாதம், நீர், தண்ணீர், குடிநீர் போன்றவற்றின் பயன்பாடு அருகி விட்டது.

இதன் நீண்டகாலப் பாதிப்பைத் தமிழர்கள் உணர்ந்துள்ளார்களா என்றால் இல்லையென்றே தோன்றுகிறது. நம்மொழிச் சொற்களின் அன்றாடப் பயன்பாடு குறைந்து போனால், காலப்போக்கில் நல்ல தமிழ்ச் சொற்கள் புழக்கத்தில் இருந்து வழக்கொழிந்தே போய்விடும் அச்சுறுத்தல் உள்ளது. இந்த வருந்ததக்க உண்மையை நாம் ஒவ்வொருவரும் உடனடியாக உணர்தல் மொழியின் தொடர்ச்சிக்கு உதவும்.

தமிழின் பெருமை அதன் தொன்மையில் மட்டுமல்ல, காலம் கடந்து இன்றளவும் வாழ்ந்துவரும் அதன் தொடர்ச்சியிலும் உள்ளது. தமிழைத் தொடர வைப்பதில் நம் அனைவருக்கும் பெரும் பங்கு உள்ளது. செம்மையான தமிழ்ச் சொற்கள் உள்ள நிலையில், ஆங்கில மொழிச் சொற்களை ஏன் பயன்படுத்த வேண்டும் என்று நாம் ஒவ்வொருவரும் எண்ணினால் – அதன் எதிரொலியாக அழகுத் தமிழ்ச் சொற்களை இயல்பாகப் பயன்படுத்தினால்- இச்சொற்கள் காலம் கடந்தும் நிற்கும். அடுத்தத் தலைமுறையும் நம் மொழிச் சொற்களைப் பிழையின்றிக் கையாளும்.

குறைந்தது 3500 ஆண்டுகளாக நம் முன்னோர், தொடர் ஓட்டம் போன்று, தமிழ் மொழியை மெருகுற அடுத்தடுத்தத் தலைமுறைக்கு வழங்கிச் சென்றதன் வாயிலாகவே இன்று இச்செம்மொழி நம்மை அடைந்துள்ளது. நாமும் மொழியின் தொன்மை குறித்து உலகளாவிய பெருமை கொள்கிறோம். இதேபோல் நாமும் நம் கடமையுணர்ந்து, தாய்மொழியை நன்முறையில் நம் வருங்கால மக்களுக்குக் கொடுத்துச் சென்றால், அவர்களும் அவர்தம் பொறுப்புணர்ந்து, அடுத்தடுத்தத் தலைமுறைக்குக் கொண்டுச் செல்வர். மொழியும் வாழும்; தமிழும் தழைக்கும்.

ஆதலினால் தமிழ் வளர்ப்போம் ! காதலினால் தமிழ் பேசுவோம் !

காளத்திமைந்தன்.

பின்னூட்டமொன்றை இடுக