”மொழிகள் யாவும் மதிப்போம்
பற்பல மொழிகள் கற்போம்
தாய்மொழிப் பற்று போற்றுவோம்
நம் தலையாயப் பொறுப்புணர்ந்து
அடுத்தத் தலைமுறையும் மகிழ்வுற்று
செம்மொழி பேணச் செய்குவோம்”
இயல்பான தமிழ்ச் சொற்கள் பலவற்றை ஒதுக்கி, நாம் சற்றும் தயக்கமின்றி நூற்றுக்கணக்கான ஆங்கிலச் சொற்களை அன்றாடம் பயன்படுத்தி வருகிறோம் என்று என்றைக்காவது நீங்கள் எண்ணிப் பார்த்ததுண்டா? அவ்வெண்ணம் ஆழமான வருத்தத்தையும், மொழியின் இயல்பான தொடர்ச்சியில் ஏற்பட்டுவரும் இடையூறு குறித்த கவலையையும் எனக்குள் உண்டாக்குகிறது.
‘சார்’, ‘மேடம்’, ‘ரைட்’, ‘லெப்ட்’, ‘டர்ன் எடு’, ‘ஆக்சுவலி’, ‘டேடி’, ‘மம்மி’, ‘அஸ்பண்ட்’, ‘வைஃப்’, ‘ப்ரோ’, ‘ஸிஸ்டர்’, ‘சென்டு பண்ணு’, ‘லைக் பண்ணு’, ‘ஸ்கூல்’, ‘மெசெஜ்’, ‘ஃபிரெண்டு’, ‘கிரவுண்டு’, ‘டாக்டர்’, ‘டீச்சர்’, ‘ஸண்டே, மண்டே’ என்றும் ‘தேங்ஸ்’ என்றும் கணக்கின்றி அடுக்கிக் கொண்டே போகலாம். நம் மொழியில் தக்க சொற்கள் இன்றி இவ்வாங்கிலச் சொற்கள் பயன்படுத்தப்படுகின்றன என்றால், புரிந்து கொள்ளுதல் எளிது. ஆயின், தொன்மையான, எளிமையான, அருமையான தாய்மொழிச் சொற்கள் இருந்தும், நம்மில் பலர் வலிந்து அவற்றிற்கு மாற்றாக ஆங்கிலச் சொற்களைப் பயன்படுத்துவதுதான் ஏன் என்று புரியவில்லை. மேலும், செல்லிடப்பேசி எண் சொல்வதிலிருந்து பல்வேறு தருணங்களில் எண்கள் பகிரும்போதும், நம்மவர்கள் பலர் ஆங்கிலத்தில்தான் எண்களைக் குறிப்பிடுகிறார்கள். ‘தமிழ்க் கூறும் நல்லுலகில்’ விலைப்பட்டியல்கூட ஆங்கிலத்தில்தான் உரைக்கப்படுகின்றது. சுமார் 3500 ஆண்டுகளாவது பயன்பாட்டில் இருந்துவரக்கூடிய ‘நன்றி’ எனும் நற்றமிழ் ஒலி கிட்டத்தட்ட அருகி ‘தேங்ஸ்’ எனும் ஆங்கிலச் சொல்லே தமிழர் இடையில் மிகையாகப் பரிமாறிக்கொள்ளப்படுகிறது.
தமிழ் அறியாதவரிடம் ஆங்கிலத்தில் உரையாடுதல் இயல்பு. தாய்மொழியறிந்த தமிழர் தம்மிடையே விரும்பி ஆங்கிலத்தில் உரையாடுதல் வியப்பு. நம் தாய்மொழி நமது அடையாளங்களில் ஒன்று; முன்னோர் விட்டுச்சென்ற விலைமதிப்பற்ற சொத்து. பழுதறக் காப்பது நம் தலையாயக் கடமையல்லவா? அடுத்துவரும் தமிழ்மக்களுக்குத் தந்து செல்ல வேண்டுமே!!! தமிழ் நம் மொழிதானே? பற்றோடு பேசவேண்டிய அவா நமக்குத்தானே இருக்கவேண்டும்? நாமே நல்ல தமிழ்ச் சொற்களைத் தவிர்த்தால் வேறு யார் பேசுவர்? தமிழை, தமிழ் மாணாக்கருக்கும், மேடைப்பேச்சாளருக்கும் இன்னபிற ஆர்வலருக்கும் மட்டுமென்று ஒதுக்கிவிட்டு, ஏனைய தமிழ்ப் பேசத்தெரிந்த பெருங்கூட்டமொன்று அன்றாட வாழ்வில் ஆங்கிலத்திலும், ஆங்கிலத்தின் இடையிடையே அவ்வப்போது தமிழ் சிறிதளவு சேர்த்தும் மட்டுமே உரையாடிக் கொண்டிருப்பதால், நூற்றுக்கணக்கான செம்மொழிச் சொற்கள் பயன்பாடின்றி வாடி நிற்கின்றன. அச்சொற்கள் காலப்போக்கில் மக்கள் நினைவிலிருந்து அகன்று, ஒதுக்கப்பட்டு முற்றிலும் மறைந்தே போகும் அச்சுறுத்தல் பெருகிவருகிறது.
தமிழ் அறிந்தோருடன் இனிய தமிழில் இயல்பாக நாம் கலந்துரையாடி வந்தால், நறுந்தமிழ்ச் சொற்களை மகிழ்வோடு பயன்படுத்தி வந்தால், மொழியின் பயணம் தடையின்றித் தொடரும். வருங்காலமும், பழுதற்ற தாய்மொழி கிடைக்கப்பெற்று நம்மை வாழ்த்தும்.
மொழிகள் அனைத்தையும் மதிப்போம்; பல மொழிகள் கற்போம்; தாய்மொழியைக் கூடுதல் அன்போடு நேசிப்போம். அடுத்தத் தலைமுறைக்கு உளமாரக் கொடுத்துச் செல்வோம். அவ்வளவே…
ஆதலினால் தமிழ் வளர்ப்போம் ! காதலினால் தமிழ் பேசுவோம் !
காளத்திமைந்தன்.
