தமிழ் வரிவடிவம் பேணுவோம்

உலகெங்கும் பரவியுள்ள தமிழுணர்வு மிக்க நல்லோர்களே… இப்பதிவைப் படிக்கும் நீங்கள், நம் மொழியின் வரிவடிவம் மற்றும் அதன் பயன்பாட்டில் அண்மைக்காலமாக ஏற்பட்டுவரும் எதிர்மறை பாதிப்பு குறித்து அக்கறை கொண்டவர் என்று நம்புகிறேன். அதே சமூக அக்கறையை, நம்மால் இயன்றளவு, நம்மைச் சுற்றியுள்ள இன்னபிற தமிழருக்குள்ளும் விதைத்திடல் வேண்டும்.

செல்லிடப்பேசியில் குறுந்தகவல்; ‘வாட்ஸ் அப்’, ‘டெலிகிராம்’, போன்ற செயலிகள் வாயிலாக கருத்துக்கள் பகிர்தல்; மற்றும் ‘முகநூல்’, ‘இன்ஸ்டாகிராம்’ உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் ஊடாக எண்ணங்களைப் பதிவிடுதல் எனப் பல்வேறு தளங்களில் தங்களின் எழுத்துச் செயல்பாட்டிற்கு நம்மில் பெரும்பான்மையினர் ஆங்கில மொழியையே தாய்மொழி போன்று கையாளுகின்றனர். தமிழ் படிக்கத் தெரியாதவருடன் ஆங்கிலமோ அல்லது தமிழல்லாது வேறு ஒரு பொதுமொழியோ பயன்படுத்தப்பட்டால் அந்தச் சூழல் வேறு. ஆயின், நன்கு தமிழ் எழுதப் படிக்கத் தெரிந்தோர் ‘தாய்மொழி’ தமிழ் தவிர்த்து வேற்று மொழி ஆங்கிலத்தை தம்மிடையே எழுத்துறவாடப் பயன்படுத்துவதை என்னவென்று சொல்வது? நமக்குள் தோன்றும் இயல்பான எண்ணங்களை, கருத்துக்களை, உணர்வுகளைத் தமிழறிந்தோரிடையே எழுத்துருவில் பகிர்ந்துகொள்ள, தாய்மொழி தமிழ்தானே சிறந்த ஊடகம்? இதை விடுத்து ஆங்கிலத்தைத் தழுவவேண்டியத் தேவைதான் என்ன? இன்னும் ஒரு கூட்டம் தமிழை ரோமானிய வரிவடிவம் கொண்டு எழுதிவருகிறது. நம் வரிவடிவம் மிகவும் தொன்மையானது. தமிழினத்தின் பழமையைப் பறைசாற்றுவதில், தொல்லியல் அகழ்வில் கிடைக்கப்பெறும் பானை எழுத்துக்களுக்குப் பெரும் பங்குண்டு. இப்படி, பிறர் வியக்கத்தக்களவில் சிறப்புடைய தமிழினத்தின் இன்றைய ஒரு பகுதியினர், தமிழ்மொழி/எழுத்துக்கள் அன்றி ஆங்கிலம்/ரோமானிய வரிவடிவம் கொண்டு எழுத்துறவாடுவது வரலாற்றுப் பிழையாகும். இத்தொன்மொழியின் தொடர்ச்சிக்கு இப்போக்கு பெரும் இடையூறு ஏற்படுத்தும்.

உலகின் பல பழமையான மொழிகள் இன்று புழக்கத்திலில்லை; பற்பல மொழிகளுக்கு வரிவடிவம் கிடையாது. எழுத்துருவற்ற வெகுவான மொழிகள் எழுதுவதற்குப் பிறமொழி வரிவடிவங்களைப் பயன்படுத்துகின்றன. ஒருசில மொழிகளை எழுத ஒன்றுக்கும் மேற்பட்ட பிறமொழி வரிவடிவங்கள் வழக்கிலுள்ளன. ஆர்வமுள்ளோர் இவைகுறித்து மேலும் படிக்கக்கூடும் என்றாலும், எடுத்துக்காட்டாக, காக்போரோக் (kokborok) மொழி பற்றி மட்டும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். குறைந்தது பொதுக்காலம் முதல் நூற்றாண்டிலிருந்து வழக்கில் உள்ளதாகக் கருதப்படும் இத்தொன்மொழி வடகிழக்கிந்தியாவில், குறிப்பாக திரிபுரா மாநிலத்தில் பெரும்பான்மை பழங்குடியினரால் இன்றளவும் பேசப்படுகிறது. ஆயின், காலப்போக்கில் ‘கோலோமா’ எனும் மூல வரிவடிவம் இழந்து, இன்று பெங்காலி மற்றும் ரோமானிய வரிவடிவம் கொண்டு எழுதப்படுகிறது.

நம் முன்னோர் நமக்குச் செம்மையான தாய்மொழியையும், அருமையான எழுத்துருவையும் காலந்தோறும் நாம் பெருமைபேச விட்டுச் சென்றுள்ளனர். தமிழின் ‘தொன்மை’ முன்னோர் கொடை; அதன் ‘தொடர்ச்சி’ நம் கடமை. நம் மொழியின் வளர்ச்சிக்கு நாம்தானே துணை நிற்க வேண்டும்? தமிழ் எழுத்துரு தள்ளிவைக்கப்பட்டு ஆங்கில மொழி மற்றும் ரோமானிய வரிவடிவப் பயன்பாடு இப்படியே தொடருமானால், காலப்போக்கில் தமிழ் எழுத்துக்கள் வழக்கொழிந்து போகும். காக்போரோக் நம் கண்முன்னே நிழலாடுகிறது. இந்த அச்சுறுத்தல் தமிழருக்கு விரைவில் புலப்படுதல் மொழிக்கு நலம் பயக்கும்.

ஆதலினால் தமிழ் வளர்ப்போம் ! காதலினால் தமிழ் பேசுவோம் !

காளத்திமைந்தன்.

பின்னூட்டமொன்றை இடுக