திரைப்படங்களில் தமிழ் காப்போம்

சிறுவயது முதலே, அறிந்தோ, அறியாமலோ நம்மில் பலருக்குத் தமிழ்த் திரையுலகம் அறிமுகம் ஆகிவிடுகிறது. அன்றிலிருந்து, திரையரங்கத்திலோ அன்றி தொலைக்காட்சி/ இணையதளம் வாயிலாகவோ நாம் தமிழ்த் திரைப்படங்களுடன் பயணித்து வருகிறோம். அப்பயணத்தின்போது என்றாவது தமிழ்த் திரைப்படங்களில் ஆங்கிலம் தேவையில்லாமல் மிகையான ஆதிக்கம் செலுத்துவதை உணர்ந்திருக்கிறீர்களா?

உரையாடல்களில் காட்சியின் தேவை கருதி ஆங்கிலமோ இன்னபிற மொழியோ இடம்பெறுவது வேறு. தமிழறிந்தோருக்காக, தமிழ்த் திரைச்சந்தையைக் குறிவைத்து வெளியிடப்படும் தமிழ்த் திரைப்படம்கூட, துவக்கத்திலிருந்தே ஆங்கிலத்தின் செல்வாக்கைப் பறைசாற்றுவது உங்களை உறுத்தியதுண்டா?

நம் தமிழ்த் திரைப்படங்களில், தேவையற்ற அல்லது தேவைக்கு மிகையான வகையில் ஆங்கிலமொழித் தாக்கத்தைக் காணப்பொறுக்காதவர் மனங்களில் பின்வரும் கேள்விகள் மற்றும் கருத்துக்கள் எழுவது இயல்பு :

  1. இன்று வெளிவரும் பல தமிழ்த் திரைப்படங்களின் பெயர்கள் அன்னைத்தமிழில் இல்லாது, ஆங்கிலத்தில் பெயர் சூட்டப்படுவதன் நோக்கம் என்ன? திரையிடப்படுவது தமிழ்ப்படம்; படத்தின் பெயர் மட்டும் அந்நிய மொழியில். ஏன் இந்தப் பொருத்தமற்ற ஆங்கில மொழி ஈர்ப்பு?
  2. தமிழ்த் திரைப்படங்களில் நடிகர், நடிகையர், தொழில்நுட்பக் கலைஞர், இசையமைப்பாளர், ஒளிப்பதிவாளர், இயக்குநர் என்று அனைவரின் பெயர்கள் ஆங்கிலத்திலும் வலிந்துக் காட்டப்படுவது ஏன்? ஒரு தமிழ்ப்படம், வேற்றுமொழிப் பார்வையாளர்களையும் வணிகரீதியாகக் கவரவேண்டி எடுக்கப்பட்டிருந்தால் ஆங்கிலத்தில் பெயர் காட்டப்படுவதும், திரையில் முழு படத்திற்கும் உரையாடல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து எழுதுவதும் புரிந்து கொள்ளமுடியும். அப்படியல்லாத படங்களிலும், படத்தில் பணியாற்றியோர் பெயர்கள் மட்டும் தமிழ்ப்படம் பார்ப்போருக்கு ஆங்கிலத்திலும் முதன்மையாக எழுதிக் காண்பிப்பது ஏன் என்றுதான் புரியவில்லை.
  3. தமிழ்ப்படங்களில் வரும் பெரும்பாலான பாத்திரங்கள் மிகுதியாக ஆங்கிலச் சொற்களை/உரையாடல்களைச் சற்றும் தயக்கமின்றி பயன்படுத்துகின்றன. அருமையான தாய்மொழிச் சொற்கள் இருப்பினும் வலிந்து ஆங்கிலச் சொற்கள் பயன்படுத்தப்படுவது நீண்டகால நோக்கில் தமிழ்மொழிக்குப் பெருந்தீங்கு விளைவிக்கும். குறைந்தது இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்க இலக்கியங்கள் அருமையான, பொருள் பொதிந்த தமிழில் போற்றும் ‘காதல்’ போன்ற மென்மையான உணர்வுகூட நம் சமகாலத்தில், தமிழ்த் திரைப்படங்களில், ‘ ஐ லவ் யூ’ , நான் உன்னை ‘லவ்’ பண்ணுகிறேன் என்று ஆங்கிலத்தில் மட்டுமே முதன்மையாகவும் பரவலாகவும் வெளிப்படுத்தப்படுவது ஆழ்ந்த வருத்தத்திற்குரியது.

இப்படிப்பட்ட தமிழ்ப் படங்களால், தமிழ் மொழிப்பற்றாளருக்கு ஏற்படும் மனஉளைச்சலையும் எண்ணக்குமுறலையும் அடுக்கிக்கொண்டே போகலாம். இவ்வாறு ஆங்கில மொழியாதிக்கத்தால் தமிழ் ஒதுக்கப்படும் இழிநிலை தொடர்ந்தால் நல்ல தமிழ்ச் சொற்கள் வழக்கொழிந்து போகாதா? நம் சொற்கள் வழக்கொழிதல் என்பது மொழி அழிவுதானே? காலப்போக்கில் நம் மொழிச் சொற்கள் நம் வருங்காலத் தலைமுறைக்கே புரியாமல் போகுமே… தமிழின் தொடர்ச்சி குறித்து நாம் அக்கறைக் கொள்ளவேண்டாமா? ஊர் கூடி இழுத்தால்தானே தேர் உருளும்?

தமிழ்த் திரையுலகும் தமிழ்க்கூறு நல்லுலகின் ஓர் அங்கம் தானே? தாய்மொழித் தொடர்ச்சிக்கு திரையுலகினரும் பொறுப்பாளிகள் அன்றோ? அக்காலத் தமிழ்ப் படங்களின் உரையாடல்கள் மற்றும் பாடல்களில் தமிழுக்கு இருந்த ஏற்றம் என்பது காலப்போக்கில் மெல்லக் குறைந்து, இன்று புகழ்பெற்ற நடிகர்களின் பற்பலத் தமிழ்ப்படப் பெயர்கள் கூட அன்னைத் தமிழில் இல்லாத இழி நிலையே பரவலாகக் காணும் அவலம் உள்ளது. சங்கப் பாக்களைத் தம் பாடல்களில் பயன்படுத்தித் தமிழ்ப் போற்றியத் திரைக்கவிஞர்கள் அருகி, தற்காலத் திரைப் பாடலாசிரியர்கள் பலர் தமிழைக் கடுகளவிற்கு இணைத்து ஆங்கிலத்தை மிகுதியாக நுழைத்தே திரைப்பாடல் புனைகின்றனர்.

படம் பார்ப்போர் மற்றும் இரசிகர் மனங்களை நல்வினை, எதிர்வினை பாதிப்புக்கு உள்ளாக்கக்கூடிய செல்வாக்குப் பெற்ற தமிழ்த் திரையுலகினர் அனைவரும் தொன்மைத் தமிழின் தொய்வில்லாத் தொடர்ச்சிக்கு இடையூறு செய்யாவண்ணம் தேவையற்ற அந்நிய மொழிக் கலப்பை உறுதியுடன் தவிர்த்து, தமிழ்மொழி அழிநிலைக்கு எதிராக, தாய்மொழி வளர்ச்சிக்கு ஆதரவாக தமிழுணர்வுடன் செயல்பட வேண்டும் என்பதே என் போன்றத் தமிழார்வலர்களின் நெஞ்சார்ந்த வேண்டுகோள். தமிழ்த் திரையுலகம் செவிமெடுத்து அக்கரையுடன் செயல்படும் என்று நம்புகிறேன்.

ஆதலினால் தமிழ் வளர்ப்போம் ! காதலினால் தமிழ் பேசுவோம் !

காளத்திமைந்தன்.

பின்னூட்டமொன்றை இடுக